ஆறாயிரம் கோடி கருப்பு பணம் : பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ சோதனை

சனி, 10 அக்டோபர் 2015 (14:51 IST)
பேங்க் ஆப் பரேடா வங்கியில், ஆறாயிரம் கோடி கருப்பு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஐ அந்த வங்கியில் அதிரடி சோதனை செய்திருக்கிறது.


 
 
மோடி அரசு பதவியேற்ற பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ஹாங்காக்கிற்கு கருப்பு பண பரிவர்த்தனை நடந்துள்ளதக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
 
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் நேற்று பேசிய போது “மோடி, தனது ஆட்சியில் ஊழல் எதுவும் நடக்க வில்லை என்று கூறுவது பொய். அவர் பதவி ஏற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இதற்காக டெல்லி அசோக் விஹார் பகுதியில் இருக்கும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே செலுத்தப்பட்டிருந்தது. அந்த பணம் ஹாங்காக்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு போன வருடம் அனுப்பிவைக்கப்பட்டது.
 
இது தொடர்பாக வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக உள்ளது. இதற்கு வங்கி உயர் அதிகாரிகளோ அல்லது நிதி அமைச்சகமோ கண்டிப்பாக உடந்தையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், அந்த வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது சில முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்