ஜெயலலிதாவிற்கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்: வரம்பு மீறி தமிழகத்தை சீண்டும் கன்னடர்கள்

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:11 IST)
காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. வேறு வழியின்றி சட்டத்தை மதிக்க கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விடுவதாக கூறி தண்ணீர் திறந்து விட்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.


 
 
இதனையடுத்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்கள், முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
 
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறி வரும் கன்னடர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
தமிழக முதல்வரின் உருவ படத்தை காலால் மித்து அவமரியாதை செய்யும் கன்னடர்கள். தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை ஒன்றை வடிவமைத்து பாடைகட்டி தூக்கி சென்று சங்கு ஊதி இறுதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அதனை தீ வைத்து எரித்து அத்துமீறி ஒரு மாநிலத்தின் முதல்வரை அவமரியாதை செய்கிறார்கள்.
 
தன்னுடைய மாநில விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது தண்ணீர் பெற்ற தமிழக முதல்வரின் உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்துவது எந்த வகையில் நியாயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. இது போன்ற அநாகரிகமான முறையில் செயல்படுவது இரு மாநிலத்திற்கும் இடையே சுமூகமான உறவை உருவாக்காது.
 
கன்னடர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழர்கள் ஈடுபட்டால் தேவையற்ற பதற்றமான சூழல் ஏற்படும். எனவே கன்னடர்கள் தங்கள் எதிர்ப்பை நியாயமான வழியில் தெரிவிப்பது நல்லது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்