மோசமான உணவு வழங்குவதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மாயமானதால் பரபரப்பு

சனி, 11 பிப்ரவரி 2017 (02:56 IST)
பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரக்குறைவான உணவு வழங்குவதாக வீடியோ வெளியிட்ட டி.வி யாதவ் மாயமானதை அடுத்து, அவர் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.


 

இந்திய எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக, ராணுவ வீரர் டி.பி.யாதவ், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை அலட்சியம் செய்வதாக அரசு மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக்கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.  இதற்கிடையே, டிபி யாதவ் விருப்ப ஓய்வு அளிக்குமாறு கூறினார். ஆனால், அவரது விருப்ப ஓய்வு முடிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், டிபி யாதவ் எங்கு உள்ளார் என்று தங்களுக்கு தெரியவில்லை என அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில் எல்லை பாதுகாப்பு படை இயக்குநருக்கு டிபி யாதவ் குறித்து இரு கடிதம் எழுதியதாகவும், ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு பிறகு மனைவியிடமும் பேசவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்