கேரளாவில் முதல் முறையாக கால்பதித்த பாஜக.! நடிகர் சுரேஷ் கோபி வெற்றி..!!

Senthil Velan

செவ்வாய், 4 ஜூன் 2024 (13:58 IST)
நடிகரும், திருச்சூர் தொகுதி வேட்பாளருமான சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமாரை விட 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்தது. 2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
 
ஐக்கிய ஜனநாயக முன்னணிசார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிட்டது. பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளில் போட்டியிட்டது.
 
கேரளாவில் பாஜக இதுவரை வெற்றிக்கணக்கை தொடங்கியதே இல்லை. இந்த மக்களவை தேர்தலில் எப்படியாவது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்று பாஜக பல்வேறு வியூகங்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டது. ஆனால் கேரளாவில் பாஜகவிற்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்று  எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது.
 
இந்நிலையில் நடிகரும், திருச்சூர் தொகுதி வேட்பாளருமான சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமாரை விட 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவை எம்பி என்ற வரலாற்றை நடிகர் சுரேஷ் கோபி படைத்துள்ளார்.

ALSO READ: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா.! மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.!!
 
சுரேஷ் கோபி, 2019 பொதுத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்