10ஆம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: சிறுவன் உள்பட 7 பேர் கைது

ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (20:25 IST)
பெங்களூருவில் 10ஆம் வகுப்பு மாணவியை சிறை வைத்து கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மாணவியின் நண்பர்களான சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
 
பெங்களூரு அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் மகள் சுஜா. (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுஜா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எஸ்எஸ்எல்சி படித்து வருகிறாள்.
 
இவளுக்கு அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சுஜாவின் பெற்றோர் வாலிபர்களுடன் பழகுவதை கண்டித்துள்ளனர். அதற்கு சுஜா அவர்கள் எனது ஆண் நண்பர்கள் எனக் கூறியுள்ளார். படிக்கிற வயதில் ஆண் நண்பர்கள் வேண்டாம். அது விபரீதத்தில் முடிந்துவிடும் என சுஜாவை அவளது பெற்றோர் எச்சரித்தனர். பெற்றோரின் எச்சரிக்கையையும், கண்டிப்பையும் மீறி தனது ஆண் நண்பர்களிடத்தில் சுஜா தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.
 
இதற்கிடையே 2 பாடத்திற்கான எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற சுஜா மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாவின் பெற்றோர், அவளை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவளது பெற்றோர் அனுமந்தநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாவை தேடி வந்தனர். மேலும் சுஜாவுடன் பழகிய வாலிபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த வாலிபர்களும் மாயமாகியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த நிலையில் வாலிபர்களின் செல்போன்கள் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அந்த வாலிபர்களிடம் இருந்து சுஜாவை மீட்டனர். அப்போது சுஜா, தேர்வு நடந்த சமயத்தில் 2 நாட்கள் விடுமுறை இருந்தது. இதனால் நான் எனது நண்பர்களுடன் சுற்றி பார்க்க சென்றேன். அப்போது அவர்கள் என்னை ஒரு வீட்டில் சிறைவைத்து மாறி மாறி கற்பழித்ததாக போலீசாரிடம் தெரிவித்தாள்.
 
இதையடுத்து சுஜாவை கற்பழித்ததாக அவளது நண்பர்களான அனுமந்த நகரை சேர்ந்த சந்தோஷ், மஞ்சுநாத், கிரண், மகேஷ், பிரசாந்த், சூர்யா மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேரை அனுமந்தநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட சுஜாவிற்கும், கைதானவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்