விஜய்–முருகதாஸ் வீட்டை முற்றுகையிடுவோம்: புரட்சி பாரதம் அறிவிப்பு

புதன், 20 ஆகஸ்ட் 2014 (13:20 IST)
கத்தி, புலிபார்வை ஆகிய சினிமா படங்களை தமிழகத்தில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:–
 
புலிபார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் துப்பாக்கி ஏந்தி வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 
பாலசந்திரனை தீவிரவாதி போன்று சித்தரிக்கும் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது. அது போல ராஜபக்சேவின் ஆதரவாளரின் நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தையும் வெளியிடக்கூடாது.
 
இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் செய்கிறார். இவர்கள் தமிழர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் இல்லை என்றால் அதில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்.
 
இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் உடனடியாக அதில் இருந்து விலக வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் புரட்சி பாரதம் மற்ற தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து போராடும்.
 
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். இப்படத்தில் இருந்து விலகாவிட்டால் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்