பிரதமர் மோடி வருகை:
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி வந்துள்ளார். இதேபோல் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தொழிலதிபர் அனில் அம்பானி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ராம்சரண், ரன்வீர் கபூர், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்துடன் செயல்படும் 11,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமர் கோயில் வளாகம் சிவப்பு வளைய பாதுகாப்பு பகுதியாகவும், கோயிலுக்கு செல்வதற்கான பிரதான பாதைகள் மஞ்சள் வளைய பாதுகாப்பு பகுதியாகவும், நகரின் இதர பகுதிகள் பச்சை வளைய பாதுகாப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஜி படை தலைமையில் அயோத்தி நகர பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், சிறப்பு கமாண்டோ, என்எஸ்ஜி, தீவிரவாத தடுப்பு படை, மாநில போலீஸார் என 30,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 31 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ரா உளவு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அயோத்தியில் முகாமிட்டுள்ளனர்.