திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!

Mahendran

வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:43 IST)
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை சேர்த்ததாக முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை, அவரது மகன் மற்றும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருமலை கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. இதன் பின்னணியில், சந்திரபாபு நாயுடு எழுப்பிய குற்றச்சாட்டு ஆந்திரத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்ட பதிவில், "திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் மிக புனிதமானது. அங்கு வழங்கப்படும் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக ஜெகன் மோகன் அரசு விலங்குகளின் கொழுப்பை சேர்த்ததாக அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இது கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துகிறது. ஜெகன் மோகனின் நிர்வாகம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றின் செயல்பாடு அவமானகரமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்