ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சனி, 27 நவம்பர் 2021 (18:10 IST)

பாமகவின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒமைக்ரான் வைரஸின் அபாயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணியின் அறிக்கை:-

"உலகில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாக அனைவரும் நிம்மதி அடைந்திருந்த வேளையில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 24ஆம் தேதி கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இத்தகவல்கள் வலியுறுத்துகின்றன.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கரோனா ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமிபியா, போஸ்த்துவானா, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி, ஜிம்பாப்வே, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது. கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள மேலும் பல நாடுகளிலும் இந்த வகை கரோனா பரவியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இனிவரும் நாட்களில் சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உருமாறிய பி.1.1.529 வகை கரோனாவுக்கு ஓமைக்ரான் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது மிகவும் கவலையளிக்கும் கரோனா வைரஸ் (Variant of Concern) என்று அந்நிறுவனம் வகைப்படுத்தியிருக்கிறது. கரோனா வைரஸ் எந்த அளவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவற்றை உலக சுகாதார நிறுவனம் 4 வகைகளாகப் பிரித்திருக்கிறது. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவாக ஓமைக்ரான் கரோனாவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருப்பதிலிருந்தே அதன் தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதுவரை மிகவும் ஆபத்தான வைரஸாக அறியப்பட்டது டெல்டா வகைதான். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் இரண்டாவது அலையின்போது கோடிக்கணக்கானவர்களைப் பாதித்ததுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது டெல்டா வகை கரோனாதான். டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஓமைக்ரான் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களைப் பற்றுவதற்கான ஓமைக்ரான் வகை கரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன.

இதுவரை மிகவும் ஆபத்தான வைரஸாக அறியப்பட்டது டெல்டா வகைதான். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் இரண்டாவது அலையின்போது கோடிக்கணக்கானவர்களைப் பாதித்ததுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது டெல்டா வகை கரோனாதான். டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஓமைக்ரான் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களைப் பற்றுவதற்கான ஓமைக்ரான் வகை கரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன.

அதிலும் அண்மையில் ஏற்பட்ட மூன்று உருமாற்றங்கள் இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவுவதற்கும், மனித உடலின் செல்களில் எளிதாக ஊடுருவுவதற்கும் வகை செய்கின்றன. அதுமட்டுமின்றி, கடைசியாக ஏற்பட்ட இரு உருமாற்றங்கள் ஓமைக்ரானில் இணைந்து இருப்பதால், இவ்வகை வைரஸ் பரவலைத் தடுப்பூசியால் எளிதில் தடுக்க முடியாது என்றும், இந்த வகை கரோனாவைத் தடுக்கும் தடுப்பூசிகளின் திறன் 40% குறைவாகவே இருக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தி டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இந்தியா உணர வேண்டும்.

ஓமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்பு விகிதம் குறித்து இனிதான் தெரியவரும். ஆனால், இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பரவல் 320% அதிகரித்து இருப்பதும், ஐரோப்பிய நாடுகளில் தினசரி தொற்று ஜெர்மனியில் 76,000, இங்கிலாந்தில் 50,000 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதும் இதன் தீவிரப் பரவும் தன்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளன.

இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஓமைக்ரான் கரோனாவின் ஆபத்தை உணர்ந்து அதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக ஓமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.ஐரோப்பிய நாடுகளில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் விமானப் பயணிகளிடம் கரோனா ஆய்வைத் தீவிரப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால் தனிமைப்படுத்துதல் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 30%க்கும் கீழாகக் குறைந்துவிட்டது. நிலைமையின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தி முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஓமைக்ரான் பரவலை முழுமையாகத் தடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்