நான் மன்னிப்பு கேட்க போவதில்லை: குத்து ரம்யா

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (16:09 IST)
பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு என்று ரம்யா கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து ரம்யா மன்னிப்பு கேட்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


 

 
திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ரம்யா கடந்த சில நாட்களுக்கு முன் மண்டியாவில் பேட்டியளித்தார்.
 
அதில் ரம்யா, நான் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளேன், மத்திய மந்திரி மனோகர் பரிக்கர் கூறியது போல் அது நரக நாடு கிடையாது. அது நல்ல நாடு, அங்குள்ள மக்கள் நம்மை போலவே உள்ளனர், என்றார்.
 
அந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதனால் பாஜகவினர் ரம்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். அதைத்தொடர்ந்து விட்டல் கவுடா என்ற வழக்கறிஞர் குடகு மாவட்டம் சோமவார்பேட்டையில் உள்ள ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரம்யா மீது தேச தூரோக வழக்கு பதிவு செய்ய கோரி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுகுறித்த விசாரணை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதையடுத்து வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரம்யா, நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆகையால் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்