விமானம் தாங்கி கப்பலுக்கு ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வியாழன், 10 ஜூலை 2014 (10:53 IST)
விமானம் தாங்கி கப்பலுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பான விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டும் பணி, கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கியது.

அதற்கு ஏற்கனவே ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணி முடிவடையவில்லை.

இந்நிலையில், பணியை விரைவில் முடிப்பதற்காக, ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இக்கப்பல், 2016 ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, 2018 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்படும். இதன் எடை 40 ஆயிரம் டன். 260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்