வரதட்சணை கொடுக்காத மருமகளை பழிவாங்க அவருக்கு ஹெச்.ஐ.வி ஊசியை மாமியார் செலுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஜஸ்வாலா பிரான் காலியாரை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது மணமகளுக்கு ரூ.15 லட்சம் ரொக்கமும், பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் வரதட்சணையாக பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.
ஆனால் அதில் திருப்தியடையாத மணமகனின் தாயார் கடந்த சில நாட்களாக மருமகளை துன்புறுத்தி வந்துள்ளார். வரதட்சணையாக மேலும் ரூ.25 லட்சமும், ஸ்கார்பியோ காரும் வாங்கி வரச் சொல்லி மருமகளை பிறந்த வீட்டிற்கு துரத்தியுள்ளார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கு பொதுவான ஆட்கள் இடையே பஞ்சாயத்து பேசித் தீர்க்கப்பட்டது.
ஆனாலும் மருமகள் கூடுதல் வரதட்சணை கொண்டு வராததால் கோபத்தில் இருந்த மாமியார், அவரை பலவாறு தொல்லை செய்துள்ளார். கொடுமையின் உச்சமாக எச்.ஐ.வி பாதிப்பு உள்ள ஊசியை பயன்படுத்தி மருமகளுக்கு ஊசிப் போட்டுள்ளார். இதனால் உடல் நலிவுற்ற இளம்பெண் மருத்துவமனை சென்றபோது அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இளம்பெண்ணும், அவரது பெற்றோர்களும் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வரதட்சணை கொடுக்காததற்காக மாமியார் அரங்கேற்றிய இந்த கொடூரம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K