பில்லுக்கு காசுக்கு பதிலாக குழந்தையை கேட்ட மருத்துவமனை! – உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:01 IST)
பிரசவத்திற்கு சென்ற பெண்ணிடம் மருத்துவ கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையையே வாங்கி கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் ரிக்‌ஷா வண்டி ஓட்டி வருபவர் சிவ் சரண். இவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரது மனைவிக்கு இரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ கட்டணமாக ரூ.35 ஆயிரம் செலுத்தும்படி கூறியுள்ளது.

சிவ் சரணிடம் அவ்வளவு பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார். அவரிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை தங்களிடம் கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு விற்று தருவதாக கூறியுள்ளனர். அதற்கு சிவ் சரண் மற்றும் மனைவி சம்மதிக்கவே குழந்தையை விற்ற பணத்தில் மருத்துவ கட்டணம் போக ரூ.65 ஆயிரத்தை சிவ் சரணுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சுகாதார துறையினர் உடனடியாக மருத்துவமனை மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மருத்துவமனையின் உரிமம் ஐந்து ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அந்த குழந்தையை யாருக்கு விற்றார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரசவ செலவுக்காக குழந்தையையே விற்ற சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்