16 ஆண்டுகால உண்ணா விரத போராட்டம் இன்று முடிவுக்கு வருகிறது

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (05:52 IST)
மணிப்பூரில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-ம் ஆண்டு போலீஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். அதில் பலர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்ற சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது. அந்த சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்வதற்கு பாதுகாப்பு படைக்கு அதிகாரம் தருகிறது.




 
அதை எதிர்த்து முறையிடவும் முடியாது. இதனால் அந்த கொடிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்போது (2000-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி) மனித உரிமை காவலரான இரோம் சானு சர்மிளா (வயது 44), உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் எந்த உணவையும் சாப்பிட மறுத்து வருகிறார். எந்த பானத்தையும் குடிக்கவும் மறுத்து வருகிறார்.

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பல முறை கைது செய்யப்பட்டும், விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார்.தற்போது அவர் அங்குள்ள ஜவகர்லால் நேரு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கில் ஒரு டியூப்பை செருகி அதன் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரோம் சர்மிளா இம்பால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் எனது உண்ணாவிரதத்தை ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முடித்துக்கொள்கிறேன். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என கூறினார். அதன்படி தனது 16 ஆண்டு கால உண்ணா விரத போராட்டத்தை இன்று இரோம் சர்மிளா முடித்துக்கொள்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்