அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய பாஜக அரசு அச்சம் கொள்கிறது என வயநாடு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு பல்வேறு மாநில பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு சுமார் 2239 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை செய்யவும் எதிர்கட்சி எம்பிக்கள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் போராட்டம் செய்து வருகின்றனர்.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், இது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அதானி விவகாரத்தை விவாதிக்க பாஜகவினர் அச்சம் கொள்கிறார்கள். நான் நாடாளுமன்றத்துக்கு புதிதாக வந்திருக்கிறேன்; இதுவரை பிரதமர் மோடியை பார்க்கவில்லை. நாங்கள் ஏன் இந்த பிரச்சனையை எழுப்பக்கூடாது?" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "ஒவ்வொரு நாளும் நாங்கள் இதுகுறித்து விவாதம் நடத்த முயற்சிக்கிறோம். ஆனால் பாஜக விவாதம் நடத்த விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவையை ஒத்தி வைக்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.