ஆதாரையும் இந்த அரசையும் வெறுக்கின்றேன்: சகோதரியை இழந்த ஒரு பெண்ணின் கண்ணீர் டுவீட்!

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:55 IST)
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவசியம் என்றாலும் இந்த ஆதார் அட்டையை எந்த ஒரு ஆவணங்களிலும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு பல இடங்களில் சரியாக பின்பற்றப்படுத்துவதில்லை. இன்னும் ஒரு சில இடங்களில் ஆதார் அட்டையை கட்டாயமாக்க கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் தன் சகோதரியின் மரணத்தால் துக்கத்திலிருந்த ஒரு பெண்ணிடம் ஆதார் அட்டை கொடுத்தால்தான் இறப்பு சான்றிதழ் கொடுப்பேன் என்று ஒரு அதிகாரி வற்புறுத்தியது குறித்து கண்ணீருடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
 
ஆதார் அட்டையை அல்லது இந்த அரசாங்கத்தை நான் என் வாழ்நாளில் இந்த அளவுக்கு வெறுத்ததே இல்லை. என் சகோதரியின் இறப்புச் சான்றிதழை பெற நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது அந்த நேரத்தில் அங்கு வந்த அதிகாரி ஒருவர் என்னுடைய சகோதரியின் அடையாளத்திற்காக அவருடைய ஆதார் அட்டையை கேட்டார். ஆனால் நான் என் சகோதரியின் டிரைவிங் லைசென்ஸ் இருப்பதாக கூறினேன். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆதார் அட்டை வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். ஆதார் அட்டை இல்லை என்றால் இறப்புச் சான்றிதழ் தர முடியாது என்றும் அவர் கூறியது என்னை பெரிதும் காயப்படுத்தியது. 
 
 
எனக்கும் என் தாயாருக்கும் மறைந்த என் சகோதரியின் ஆதார் அட்டை எங்கு உள்ளது என்று தெரியாது. ஆனால் அதிகாரிகளும் தகனம் செய்யும் இடத்தில் உள்ளவர்களும் ஆதார் அட்டையை கண்டிப்பாக கேட்கின்றனர். எனது சகோதரியின் மறைவால் ஏற்பட்ட வலியை விட அவருடைய ஆதார் அட்டையை கண்டு பிடிப்பது எனக்கு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது என்று கண்ணீருடன் பதிவு செய்திருந்தார் 
 
 
இந்த பதிவை அடுத்து ஆதார் அதிகாரிகள் அந்த பெண்ணை அணுகி வருத்தம் தெரிவித்தனர். அவர்களிடம் மருத்துவமனை மற்றும் தகனம் செய்யுமிடத்தில் ஆதார் அட்டையை கண்டிப்பாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்துங்கள் என்று கூறியதாகவும் அந்த பெண் தனது டுவீட்டில் பதிவு செய்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்