திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானதால் ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் மடாதிபதிகள் மற்றும் இந்து அமைப்பினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "திருமலையை காப்பாற்றுங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை காப்பாற்றுங்கள்" என்று முழக்கமிட்டுக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிடுகின்றனர்.
இந்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், லட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.