உத்தரபிரதேச மாநிலத்தின் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. அவருடைய மனைவி ராதிகா. 2017 ஆம் ஆண்டில் இவர்கள் திருமண உறவில் இணைந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ராதிகா, திருமணத்திற்கு முன்பே தனது ஊரிலுள்ள ஒரு இளைஞரை காதலித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்குள் உறவு தொடர்ந்தது. பப்லு வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகா தனது காதலனை ரகசியமாக சந்தித்து வந்தார்.
இது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்கள் பப்லுவிடம் இதைப் பற்றி சொல்லியதும், அவர் ராதிகாவிடம் கேள்வி எழுப்பினார். "நம்மிடம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இனிமேல் இந்த காதல் வேண்டுமா?" என்று கேட்டார். ஆனால், ராதிகா தனது காதலனை மறக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்தார்.
இதனால், வேறு வழியில்லாமல், பப்லு ஒரு முக்கிய முடிவுக்கு வந்தார். ராதிகாவை, அவளுடைய காதலனுடன் சேர்த்து வைக்கவேண்டுமென உறுதியானார். இதனை தனது மனைவிக்கும், கிராம மக்களுக்கும் அவர் நேரடியாக தெரிவித்தார். ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதோடு, பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
நேற்று, பப்லு தன்னுடைய மனைவி ராதிகாவுக்கும் அவரது காதலனுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர், கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள், குழந்தைகள், குடும்பத்தினர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்தபின், பப்லு ராதிகாவிடம், தமது குழந்தைகளை தானே வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். ராதிகா அதற்கு சம்மதித்தார். பின்னர், எட்டு ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த மனைவியை, காதலனுடன் அனுப்பி வைத்து, பப்லு தனது இரண்டு குழந்தைகளை அழைத்து சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.