பணத்திமிரிலும், அதிகார போதையிலும், பெரியடத்துப் பிள்ளைகள் என்ற மிடுக்குடனும் பல அதிகாரிகளின் பிள்ளைகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் மீதும், பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கும் அப்பாவி பொதுமக்கள் மீதும் போதையில் காரை ஏற்றிக் கொள்வதை நாம் அன்றாடம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் மீதெல்லாம் சட்டம் பாய்கின்றதா என்றால் இல்லை.ஏனென்றால் அவர்கள் பெரியடத்துப் பிள்ளைகள்.
டெல்லி உத்தம்நகரில் கால்செண்டருக்குள் புகுந்த போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவன், அங்கிருந்த பெண் ஒருவரை சரமாரியாக தாக்கினான். அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்து, செருப்புக் கால்களால் அந்த பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து, தனது முட்டியால் அந்த பெண்ணை குனியவைத்து கொடுமையாக தாக்கினான். இதனை அங்கிருந்தவர்கள் யாருமே தடுக்கவில்லை. செல்போனில் படம் பிடித்துக் கொண்டு அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே அந்த பெண்ணை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகவே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த பெண்ணை தாக்கிய வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.