‘80 சதவிகித பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு தகுதி இல்லாதவர்கள்!’ - அதிர்ச்சி தகவல்

வியாழன், 28 ஜனவரி 2016 (11:22 IST)
இந்தியாவிலுள்ள 80 விழுக்காடு பொறியியல் பட்டதாரிகள், பணிக்கு அமர்த்த தகுதியற்றவர்கள் என்றும், இதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மோசமான கல்வி முறையே காரணம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

 
‘ஆஸ்பயரிங் மைண்ட்ஸ்’ [Aspiring Minds] என்ற அமைப்பு, ‘தேசிய அளவிலான வேலைக்கு தகுதியானவர்கள்’ என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 1 லட்சத்து 50 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகளை தற்போது அறிக்கையாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், இந்தியாவில் 80 விழுக்காடு பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு எண்ணற்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பே பட்டப்படிப்பாக உள்ளது.
 
இருப்பினும் நாளுக்கு நாள் கல்வித்தரம் அதிகரித்து வரும் நிலையில், நமது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளை- வேலையில் அமர்த்துவதற்கு தகுதியான மாணவர்களை உருவாக்கும் வகையில் மாற்ற வேண்டியது உள்ளது.
 
இன்றைய நிலையில், தில்லி மாநகரமும், அதையடுத்து பெங்களுரூ மற்றும் நாட்டின் மேற்குப் பகுதி நகரங்களில் உள்ள கல்லூரிகள் மட்டுமே, வேலைக்கு அமர்த்தும் தகுதியுடைய மாணவர்களை உருவாக்குபவையாக உள்ளன. தரமான கல்வியை அளிக்கின்றன.
 
கேரளா மற்றும் ஒடிசாவும் வேலைக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் பட்டியலில் உள்ளன. கேரளத்திற்கு அடுத்து பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உள்ளன. இந்த ஆய்வில் கிடைத்துள்ள ஆரோக்கியமான தகவல் என்னவென்றால், வேலைக்கு அமர்த்துவதில் பாலின பாரபட்சம் குறைந்துள்ளது.
 
பொறியியல் பட்டதாரிகளில் ஆண்களும், பெண்களும் சமமாகவே வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இதில் வேலைகளில் விற்பனை பொறியாளர் துறைகளிலும், தகவல் தொழில் நுட்ப துறைகளிலும் பிபிஓ துறைகளிலும் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
பரவலாக உள்ள கருத்து போலன்றி மிகச்சிறிய நகர்ப்புறங்களிலிருந்து கூட வேலைக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் அவர்களை புறந்தள்ளுவது நல்லதல்ல என்றும், அவர்களில் அதிகமான திறமைசாலிகள் உள்ளனர் என்பதை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் கவனிக்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்