ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு: பிரகாஷ் ஜவடேகர்

திங்கள், 6 மே 2019 (18:30 IST)
நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் மதியம் 2 மணி முதல் 5 மணி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை தமிழக மாணவர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் எழுதினர். இந்த ஆண்டு நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் ரயில் தாமதம் காரணமாக பெங்களூரில் தேர்வு எழுத வேண்டிய 600 மாணவர்கள் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்த 600 மாணவர்கள் வந்த ரயில் 4 மணி நேரம் தாமதமாக கிளம்பியது மட்டுமின்றி சிக்னல் உள்பட பல்வேறு காரணத்தால் 7 மணி நேரம் பெங்களூருக்கு தாமதமாக வந்தது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்த 600 மாணவர்களும் நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். ரயில்வே அதிகாரிகளும் இதுகுறித்து அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர். 
 
இந்த நிலையில் ரயில் தாமதமாக வந்ததால் நீட் தேர்வெழுத முடியாமல் போன கர்நாடக மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் அந்த 600 மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்