5 லட்சம் குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி

புதன், 15 ஜூலை 2009 (17:03 IST)
நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்து 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் முறையான கல்வி அளிக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஹரிஷ் ராவத் எழுத்து மூலம் அளித்த பதிலில், தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட முறையின் கீழ் 271 மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி முறைக்கு திருப்பி விடப்பட்டதாகக் கூறினார்.

பள்ளிகளில் அந்தக் குழந்தைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, தற்போது கல்வி பயின்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகள் அவர்கள் செய்யும் வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிறப்புப் பள்ளிகளில் விரைவுபடுத்தக் கூடிய கல்வி வழங்கப்படுவதுடன், தொழிற்பயிற்சி, ஊட்டச்சத்து, உதவித்தொகை, உடல் நலம் வசதிகள் போன்றவையும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்