30 கிருஸ்த்துவர்கள் இந்துக்களாக மதமாற்றம்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

திங்கள், 22 டிசம்பர் 2014 (18:00 IST)
கேரளாவில் 30 கிருஸ்த்துவர்கள் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரள மாநிலம் ஆலப்புழாவில் 8 குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்த்துவர்கள், இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்த மதமாற்றம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆலப்புழாவில் மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிச்சாநல்லூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் 30 பேர் இந்துக்களாக மதம் மாறினர்.
 
இதற்கிடையே மதமாற்றம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கூடுதல் போலீஸ் ஜெனரல் ஹேமச்சந்திராவிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதில் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அவர் விசாரிப்பார் என்று கூறினார். 
 
இதற்கிடையே கிருஸ்த்துவர்கள் விருப்பத்தின்படியே மதம் மாறிக் கொண்டனர் என்று விஸ்வ இந்து பரிஷத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதம் மாறுபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விஸ்வ இந்து பரிஷத் செய்யும் என்றும் அப்பகுதியை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரதாப் பி பாதிக்கால் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்