மத்திய அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கட்டாயம்

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (23:06 IST)
மத்திய அரசுப் பணிகளில் அனைத்து வகையான பிரிவுகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
 
ஐஏஎஸ் பணியிடங்களுக்கான பதவி உயர்விலும் இந்த இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்குவது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது முழுமையான பங்கேற்பிற்கு வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்த மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்த உத்தரவு, மாற்றுத் திறனாளிகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக அமைந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்