காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் எங்கே என வைகோ தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவிற்கு மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
இந்நிலையில் ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறப்பு வரைவு நீக்கப்பட்ட பின் அசாதாரண நிலை ஏற்படுவதைத் தவிர்க்க பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்(PSA) கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ் 290 முதல் 4000 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க ஸ்ரீநகர் நீதிமன்றம் முனைப்புக் காட்டவுள்ளது.