வடகிழக்கு இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்

செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (11:41 IST)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மர் எல்லைப் பகுதியில் நேற்று நள்ளிரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் நள்ளிரவு 1.08 மணி என்பதால், ஆழந்த உறக்கத்தில் இருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்று மதியம் 2.23 மணியளவில் வடகிழக்கு மாநிலங்களில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் முற்றிலுமாக அடங்குவதற்கு முன்பாக இன்று அதிகாலை மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மியான்மரின் மெய்க்டிலா பகுதியில் இருந்து தென்மேற்கே 125 கி.மீ தூரத்தில், பூமிக்கடியில் 82.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்