லிபியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம் உடனடித் தொடக்கம்: அயலுறவு அமைச்சகம்

வியாழன், 24 பிப்ரவரி 2011 (16:34 IST)
லிபியாவில் அந்நாட்டு அதிபர் கர்னல் கடாஃபியை ஆட்சியில் இருந்து வெளியேறுமாறுக் கோரி நடைபெற்றுவரும் புரட்சியை இராணுவத்தைக் கொண்டு கடஃபி அரசு ஒடுக்கி வரும் நிலையில், அங்கு வாழ்ந்துவரும் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றிக் கொண்டுவரும் பணி உடனடியாகத் தொடங்கப்படுவதாக அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் டிரிபோலியிலும், அதன் புற நகர்ப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். டிரிபோலியில்தான் அதிக பட்ச இராணுவ அடக்குமறை கட்டவிழ்த்துவிட்ப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள இந்தியர்கள் மீட்க உடனடி நடவடிக்கைத் தொடங்கப்படும் என்று அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ள அயலுறவு அமைச்சகம், ஸ்கோஷியா பிரின்ஸ் எனும் கப்பல் இதற்காக ஈடுபடுத்தப்படும் என்றும், அது பென்காசி துறைமுகம் சென்று 1,200 பேரை ஒரு சேர ஏற்றிக்கொண்டு எகிப்து வந்து சேரும் என்றும், அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்தக் கப்பல் வரும் ஞாயிற்றுக் கிழமை பென்காசி துறைமுகம் செல்லும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவிலுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பேசிய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “லிபியாவிலுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவோம், அதற்காக எந்தக் கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படமாட்டாது” ்கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்