பதவி விலகத் தயார் - லாலுபிரசாத்!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (23:11 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்யும்பட்சத்தில், தாமும் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று லாலு பிரசாத் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்தும்,
தாக்குதலுக்கு காரணமான ராஜ்தாக்கரேயை கைது செய்யக் கோரியும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தும் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள கட்சியினர் ஏன் நாடாளுமன்ற எம்.பி. பதவியை மட்டும் ராஜினாமா செய்யவேண்டும்?

நிதிஷ்குமார் உள்பட பீகார் சட்டமன்ற, சட்டமேல்-சபை உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வதோடு, மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவி விலகட்டும்.

அப்படிச் செய்தால் தாம் உள்பட ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம் என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்