நா.கூ.கு-வில் ஜெயந்தி நடராஜன்

செவ்வாய், 1 மார்ச் 2011 (17:14 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சி்ங்வி விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் அக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயந்தி நடராஜன் நா.கூ.கு.விற்கு தேர்வு செய்யப்பட்டதை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

வழக்குரைஞரான அபிஷேக் சிங்வி, செல்பேசி நிறுவனங்களுக்காக 2002 முதல் 2004 வரை பல்வேறு வழக்குகளில் அரசிற்கு எதிராகவே தான் வாதிட்டுள்ள காரணத்தினாலும், அப்போது, அரசின் தொலைத் தொடர்புக் கொள்கைகளை நீதிமன்றத்தில் விமர்சனம் செய்திருப்பதனாலும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்கும் நா.கூ.கு.வில் இடம்பெறுவது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்று உணர்வதால், அதன் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக கபில் சிபல் கூறியுள்ளார்.

ஜெயந்தி நடராஜனையும் சேர்த்து நா.கூ.கு.வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களாக டி.ஆர்.பாலுவும், தம்பிதுரையும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்