தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஆர்.வி.ராஜு நியமனம்

வியாழன், 15 ஜனவரி 2009 (17:26 IST)
தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ராதா வினோத் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைவராக பணியாற்றி வருகிறார்.

தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.

சி.பி.ஐ.யிலும், பிற துறைகளிலும் ஆர்.வி.ராஜுவுக்கு உள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமையின் முதல் தலைவராக அவரை நியமித்துள்ளதாகவும், வரும் 2010ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை அப்பதவியில் அவர் நீடிப்பார் என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

தற்போது 59 வயதாகும் ஆர்.வி.ராஜு, கடந்த 1975ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர், வரும் ஜூலை 31ஆம் தேதி ஓய்வுபெற இருந்தார்.

ஆனால், தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஆர்.வி.ராஜு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா விரைவில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்