தெலுங்கு தேசம் பற்றிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர்

வியாழன், 4 மார்ச் 2010 (18:09 IST)
ஆந்திர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் பற்றி நேற்று தெரிவித்த கருத்துகள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவைத் தலைவர் கிரண் குமார் ரெட்டி இன்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய கிரண் குமார், “நான் நேற்று கூறிய வார்த்தைகளால் யாராவது வருத்தப்பட்டால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்துக்களையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அவையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கருத்துகளை தெரிவித்தேன். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்” என்றார்.

நேற்று நடந்த ஆந்திர சட்டப்பேரவையில் கடப்பா மாவட்டத்தில் உள்ள தனியார் உருக்கு ஆலைக்கு தண்ணீர் வழங்கும் விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, “என்ன முட்டாள்தனம் இது?” என்று அவைத் தலைவர் கிரண் குமார் ரெட்டி கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, “அவைத் தலைவர் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறுவதா? வேண்டாமா? என்ற முடிவை அவரது அறிவுக்கே விட்டுவிடுகிறேன” என்று நேற்று கூறியிருந்த நிலையில், தனது கருத்துகளைத் திருமபப் பெற்றுக் கொள்வதாக அவைத்தலைவர் கிரண் குமார் இன்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்