தெலுங்குதேச எம்.பி.க்களுடன் ஜெகன் கைகோர்ப்பு; நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

செவ்வாய், 15 டிசம்பர் 2009 (18:56 IST)
தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டபோது, அதில் காங்கிரஸ் எம்.பியும், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியும் கலந்து கொண்டார்.

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுடன் ஜெகன் சேர்ந்து அமளியில் ஈடுபட்டதற்கு கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது கவுட் யாஸ்கி மற்றும் எம். ஜெகன்னாத் தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஏ.கே. ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் நடத்தை விதிகளை ஜெகன்மோகன் மீறி விட்டதாகவும், எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாங்கள் ஆண்டனியிடம் கோரியிருப்பதாகவும் யாஸ்கி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் இன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்