கேள்வி கேட்க எம்.பி.க்களுக்கு லஞ்சம்: 2 ஊடகவியலாளர்கள் மீதான குற்றச்சாற்று ரத்து

வெள்ளி, 24 செப்டம்பர் 2010 (19:28 IST)
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் இணைய தள ஊடகவியலாளர்கள் 2 பேர் மீதான குற்றச்சாற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியதை இணைய தள பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியது.

காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் இதில் சிக்கினர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்களுடன், `கோப்ரா போஸ்ட் டாட் காம்' என்ற இணைய தளத்தின் அனிருத் பஹல், சுஹாசினி ராஜ் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீதும் டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி, இரு பத்திரிகையாளர்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என்.டிங்க்ரா, இரு பத்திரிகையாளர்களுக்கும் கீழ் நீதிமன்ற நீதிபதி அனுப்பிய சம்மன் உத்தரவை ரத்து செய்தும், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாற்றுக்களை ரத்து செய்தும் இன்று உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்