கர்நாடகத்தில் தீர்வு: பெண் அமைச்சர் பதவி விலகல்

திங்கள், 9 நவம்பர் 2009 (16:56 IST)
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வார காலமாக நீடித்து வந்த அரசியல் பிரச்சினைக்கு நேற்று தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அம்மாநில கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஷோபா தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

முதல்வர் எடியூரப்பாவுக்கும், ரெட்டி சகோரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நேற்று புதுடெல்லியில் கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜூடன் நடத்திய பேச்சுகளுக்குப் பின் தீர்க்கப்பட்டன.

இதையடுத்து எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரெட்டி சகோதரர்கள் கைவிட்டு, முதல்வருடன் கைகுலுக்கினர்.

எடியூரப்பாவும், ரெட்டி சகோதரர்களும் கர்நாடக மாநில நலன் கருதி இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.

கர்நாடக பாஜகவில் கோஷ்டிப்பூசல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எடியூரப்பா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஷோபா இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியதாக பெங்களூருவில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

சமரசத் திட்டத்தின் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ததாகத் தெரிகிறது. எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான ஷோபாதான் பிரச்சினைக்கு முழுகாரணம் என்று ரெட்டி சகோதரர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்