எல்லையில் அத்துமீறல்: சீனாவுடன் பேச பாதுகாப்புச் செயலர் செல்கிறார்

சனி, 2 ஜனவரி 2010 (20:51 IST)
இந்திய, சீன கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் மேற்கொண்ட அத்துமீறிய ஊடுறுவல்கள் குறித்துப் பேச இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் பீஜிங் செல்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன இராணுவத்தின் அத்துமீறலால் இந்தியா சீனா இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான லேயில் அம்மாநில அரசு மேற்கொண்ட சாலை இடும் பணிகள் சீன இராணுவம் ஆட்சேபனை தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. இதுவும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.

இதுமட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்லக் கூடாது என்றும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றும் சீனா கூறியது. அம்மாநிலத்திற்கு தீபெத் தலைவர் தலாய் லாமா செல்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி பீஜிங் செல்லும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாருடன், இந்திய இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தலைமையின் அதிகாரிகளும் செல்கின்றனர் என்று கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள், எல்லை அத்துமீறல்கள் குறித்து சீனத் தலைவர்களுடன் பாதுகாப்புச் செயலர் தலைமையிலானக் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்