எந்த நிறுவனத்திற்கும் சாதகமாக நடந்துகொள்ளவில்லை: தயாநிதி மாறன்

புதன், 1 ஜூன் 2011 (19:43 IST)
ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததற்காக எந்த ஒரு அயல்நாட்டு நிறுவனமும் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில், தான் அமைச்சராக இருந்த காலத்தில், முதலீடு செய்யவில்லை என்று 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் குழுமம் முதலீடு செய்த பிறகுதான் அதற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், அதற்காக மாக்சிஸ் குழுமம் சன் டிவி நெட்வொர்க்கில் ரூ.599 கோடி முதலீடு செய்தது என்றும், இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு கிடைத்த இலஞ்சம் என்றும் செய்திகள் கூறுகின்ற நிலையில், தயாநிதி மாறன் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

“தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நான் இருந்தபோது எந்த ஒரு நிறுவனத்திற்கும் சாதகமாக ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவை உரிமம் வழங்கவில்லை. அதே நேரத்தில் நான் அமைச்சராக இருந்தபோது கலாநிதி மாறன் நிறுவனத்தி்ல் (சன் டிவி) எந்த நிறுவனமும் முதலீடும் செய்யவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு நிறுவனத்திற்கும் சாதகமாக நான் நடந்துகொள்ளவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

“எந்த ஒரு நிறுவனமும் வரிசையை விட்டு விலகி முன்னாள் குதித்து வந்த உரிமத்தை பெறவில்லை. அதே நேரத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்றும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்