உள்துறை அமைச்சகத்தில் கைரேகை வருகை பதிவேடு முறை அறிமுகம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (19:32 IST)
உள்துறை அமைச்சகத்தில் உள்ள அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை வருகை பதிவேடு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உள்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக், ஜெய் சல்மார் ஹவுஸ் மற்றும் லோக்நாயக் பவன் ஆகிய 3 கட்டிடங்களிலும் உள்ள பல்வேறு நுழைவு வாயில்களில் 15 இணைய அடிப்படையிலான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கைரேகை வருகை பதிவேட்டு முறையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை தொடங்கி வைத்தார். உடனடியாக இந்த முறை அமலுக்கு வந்தது.

உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், இனி காலையில் அலுவலகம் வரும்போதும் மாலையில் பணி முடிந்து திரும்பும் போதும் கைரேகைகள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்