இயேசு மது அருந்துவது போன்று படம் வெளியீட்டால் கிறிஸ்துவர்கள் கொந்தளிப்பு

வெள்ளி, 2 மார்ச் 2012 (21:42 IST)
கத்தோலிக்க சமூகத்தின் மாத இதழில் இயேசு கிறிஸ்து ஒரு கையில் பீர் கோப்பையையும் மறுகையில் சிகரெட்டையும் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியானது கிறிஸ்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவன் ஹூருடே தூத் என்ற அந்த இதழ் குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள குஜராத் சாகித்ய பிரகாஷ் சொசைட்டியில் அச்சிடப்படுகிறது.

இந்த மாத இதழ் குஜராத்தில் கத்தோலிக்கர்களின் அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த நிலையில் அதன் 30-வது பக்கத்தில் இயேசு கிறிஸ்து பீர் கோப்பையை வைத்திருக்கும் படம் வெளியானது கிறிஸ்துவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆனந்த நகர் போலீசில் அந்த இதழின் வாசகர்களில் ஒருவரான மனோஜ் மக்வான் என்பவர் புகார் அளித்துள்ளார்.

ஆனந்த் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியோரா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புத்தக நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டு கிறிஸ்துவ சமுதாய உறுப்பினர்கள் என்னிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த புகைப்படம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு சிறிய அளவில் கறுப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளையில் இருந்ததால் இயேசு கிறிஸ்து கையில் பீர் கோப்பை மற்றும் சிகரெட் இருந்ததை கவனிக்கவில்லை என அந்த மாத இதழின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்