ஆந்திராவை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார் - கிரண்குமார் ரெட்டி

திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:46 IST)
ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூறினார்.
FILE

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்களும் 2 மாத தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் கடுமையாக போராடின.

ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சங்கத்தலைவர் அசோக்பாபு நிருபர்களிடம் கூறும்போது, "தெலங்கானா மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும் நடவடிக்கைகளை தடுக்க இந்த இறுதி வாய்ப்பை சீமாந்திரா பகுதி மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மசோதா நிறைவேறாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறினால் மாநில மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அதோடு உங்கள் அரசியல் வாழ்வு அழிந்துவிடும். மாநிலம் பிரிக்கப்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களின் இயலாமை தான் காரணம்" என்றார். இன்று (திங்கட்கிழமை) முதல் மத்திய அரசு அலுவலகங்கள் மூடல் உள்பட பல்வேறு போராட்டங்களையும் அவர் அறிவித்தார்.

டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் பிரிப்பதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று கிரண்குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலங்கானாவால் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பூஜ்யம் தான் கிடைக்கும். இது ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிரதமரும், சோனியா காந்தியும் பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். 20, 25 வருடங்களாக தீவிரமான காங்கிரஸ்காரர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஏன் இப்போது எதிராக திரும்பியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆந்திராவை பிரிக்க நினைத்தது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. நாங்கள் ஜனாதிபதியின் பரிந்துரையை இரு அவைகளிலும் ஏற்க மறுத்துவிட்டோம். ஆனால் மத்திய தலைவர்கள் இதனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய நினைப்பது வருந்தத்தக்கது.

மாநிலத்தை ஒன்றாக வைத்திருக்க நான் பதவியை ராஜினாமா செய்வது உள்பட எந்த தியாகத்தையும் செய்ய தயார். மக்கள் நலனைவிட அதிகாரம், முதலமைச்சர் பதவி எதுவும் பெரிதல்ல. தனி நபரைவிட கட்சி பெரிது தான். ஆனால் மக்கள்தான் கட்சியை விட பெரிதானவர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். நேரம் வரும்போது நான் உரிய முடிவை எடுப்பேன்.

ஆந்திர சட்டசபை எடுத்த முடிவுக்கு பாராளுமன்றமும், அனைத்து கட்சிகளும் மதிப்பு கொடுக்க வேண்டும். ஆந்திராவை ஏன் பிரிக்க வேண்டும்? இதனால் இரு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் பயன் ஏதும் உள்ளதா? இரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு மின்சாரம், கல்வி போன்ற பலவகைகளிலும் பாதிப்பு தான் ஏற்படும்.

நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியும். மக்களின் எண்ணம் என்ன என்று எனக்கு தெரியும். நான் மக்கள் எண்ணத்தை தான் பிரதிபலிக்கிறேன். இவ்வாறு கிரண்குமார் ரெட்டி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்