நிலவை நெருங்குகிறது சந்திரயான்-1: இந்திய விஞ்ஞானிகளுக்கு புதிய சவால்!

திங்கள், 10 நவம்பர் 2008 (14:51 IST)
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தால் (இஸ்ரோ) விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1 ஆளில்லா விண்கலம் நிலவின் மிக அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறியுள்ளது. அதனை நிலவுக்கு வெகு அருகில் (100 கி.மீ தொலைவுக்கு) கொண்டு செல்லும் சவாலான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 ஆளில்லா விண்கலம் கடந்த மாதம் 22ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

முதலில் பூமியின் நீள்வட்டச் சுற்றுப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-1 விண்கலத்தை பெங்களூரு அருகேயுள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள், கொஞ்சம், கொஞ்சமாக நிலவை நோக்கி செலுத்தினர்.

இதுவரை ஐந்து முறை சந்திரயான்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைத்து அதனை 500 கி.மீ மற்றும் 7500 கி.மீ. தொலைவிலான நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்று மாலை அதனை நிலாவுக்கு அருகில் 100 கி.மீ. தொலை சுற்றுவட்டப் பாதைக்குள் கொண்டு செல்லும் சவாலான பணியில் ஈடுபடுகின்றனர்.

இதில் ஏதாவது மிகச் சிறிய தவறு ஏற்பட்டாலும் சந்திரயான்-1 நொறுங்கும் அபாயம் உள்ளதால் பைலாலு கட்டுப்பாட்டு மையத்தின் இன்றைய செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்‌ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்