சரணடைந்தார் எடியூரப்பா;14 நாள் காவலில் வைக்க உத்தரவு!

சனி, 15 அக்டோபர் 2011 (17:51 IST)
நில ஊழல் வழக்கில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் சரணடைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை இம்மாதம் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எடியூரப்பாவுக்கு எதிராக இரண்டு நில ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விரு வழக்குகளிலும் தமக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவற்றை இன்று விசாரித்த லோக்ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதிந்தீர ராவ், இரு ஜாமீன் மனுக்களையும் நிராகரித்ததோடு,எடியூரப்பாவை கைது செய்யும் உத்தரவையும் பிறப்பித்தார்.

இதனால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து எடியூரப்பா லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து அவரை வருகிற 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்