வந்தா ராஜாவாதான் வருவேன்' திரை விமர்சனம் சிம்பு திருந்தவே மாட்டாரா?

வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (19:11 IST)
சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்தவுடன் இனி சிம்பு அவ்வளவுதான் என்று திரையுலகை சேர்ந்தவர்களே கூறினர். ஆனால் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தின் மூலம் தனது வித்தியாசமான நடிப்பில் ரீஎண்ட்ரி கொடுத்த சிம்பு, சுந்தர் சியின் 'வந்தா ராஜாவாதான்' வருவேன் படத்தின் மூலம் மீண்டும் தனது பழைய மார்க்கெட்டை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?
 
வெளிநாட்டில் வசிக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் நாசர். அவருடைய மகள் ரம்யாகிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்ததால் கோபமான நாசர், ரம்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன் பின் இருபது வருடம் கழித்து மீண்டும் மகளை நினைத்து வருத்தப்பட்டு அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாசரின் பேரனான சிம்பு, தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க அத்தை ரம்யாகிருஷ்ணனை அழைத்து வர செல்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அத்தை மகள்களான கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் இருவரில் யாரை திருமணம் செய்தார்? என்பதுதான் கதை
 
சிம்புவின் பில்டப், அலட்டல், தன்னை தானே புகழ்ந்து கொள்வது, மொக்கையான பஞ்ச் வசனங்கள், குண்டான உடம்பை வைத்து கொண்டு டான்ஸ், ஸ்லோ மோஷனில் சண்டைக்காட்சி என தனது ரசிகர்களை மட்டும் திருப்தி செய்து மற்ற ஆடியன்ஸ்களை கொடுமைப்படுத்தியுள்ளார். இதேரீதியில் சிம்பு சென்றால் கஷ்டம்தான்
 
கேத்ரினா தெரசா, மேகா ஆகாஷ் இருவரும் கவர்ச்சிக்காகவும், சிம்புவுடன் மாறி மாறி டூயட் பாடவும் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேகா ஆகாஷ் நடிப்பு சில இடங்களில் தேறுகிறது. ஒருசில காட்சிகளில் ஜெனிலியாவை ஞாபகப்படுத்துகிறார்.
 
பிரபு, நாசர், ராதாரவி என மூன்று சீனியர் நடிகர்களை இயக்குனர் சுந்தர் சி வேஸ்ட் செய்துள்ளார். ரம்யாகிருஷ்ணன் கேரக்டர் மட்டுமே பரவாயில்லை. 
 
காமெடி என்ற பெயரில் ரோபோ சங்கரும், விடிவி கணேஷும் மொக்கை போடுகின்றனர். படத்தின் ஒரே ஆறுதல் யோகிபாபு மட்டுமே. இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே தியேட்டர் கலகலக்கின்றது.
 
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் ரொம்ப சுமார். ரெட் கார்டா பாடல் மட்டும் ஓகே. பின்னணி இசையிலும் புதுமையில்லை
 
இயக்குனர் சுந்தர் சி தனது பாணியில் இருந்து விலகி முற்றிலும் சிம்பு ரசிகர்களுக்காகவே படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் அதிகபட்சம் மூன்று நாட்கள் தான் படத்தை ஓட்டுவார்கள். அதன்பின்னும் ஒரு படத்திற்கு கூட்டம் வரவேண்டுமானால் அந்த படம் பொதுவான ரசிகர்களை கவர வேண்டும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் 'விஸ்வாசம்.  அரதப்பழசான கதை, டுவிஸ்ட் இல்லாத திரைக்கதை, மொக்கை காமெடி, சுமாரான பாடல்கள் என எந்த டிபார்ட்மெண்டும் தேறவில்லை. 
 
மொத்தத்தில் சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் ராஜா, மற்றவர்களுக்கு கூஜா
 
ரேட்டிங்: 2/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்