தோழா விமர்சனம்

வெள்ளி, 25 மார்ச் 2016 (14:10 IST)
கொம்பன் வெற்றிக்குபின் கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் படம் தோழா. அதுமட்டுமின்றி முதன்முறையாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட், மீண்டும் தமன்னாவுடன் ஜோடி என எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்தது என்பது உண்மை. அந்த எதிர்ப்பார்ர்புகளை பூர்த்தி செய்ததா தோழா... பார்ப்போம்..

 

படத்தின் கதைப்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்றுவருபவர் கார்த்தி. இதனால் அவரை அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் மதிப்பதே இல்லை. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த கார்த்தியின் தாயார் அவரை வீட்டை விட்டே அனுப்புகிறார். வீட்டைவிட்டு வெளியேறிய கார்த்தி நண்பர் விவேக் உதவியால் ஒரு வேலையில் சேர்கிறார். ஆனால் அந்த வேலை பிடிக்காததால் அங்கிருந்து வெளியேறுகிறார்.

இந்நிலையில், ஒருநாள் பெரிய தொழிலதிபரான நாகர்ஜூனாவுக்கு உதவியாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து அங்கு செல்கிறார்.  நாகர்ஜூனாவும் கார்த்தியை உதவியாளராக நியமிக்கிறார். பின்னர் நாகர்ஜூனாவின் செகரட்ரியாக பணியாற்றும் தமன்னாவிடம் காதல் கொள்கிறார். இந்நிலையில் நாகர்ஜூனாவின் உடல் நிலை  மோசமாகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருடைய நிலையை எண்ணி அனைவரும் வருந்துகின்றனர். நாகர்ஜூன் பிழைத்தாரா? தமனாவுடனான காதல் கை கூடியதா? என்பதை அருமையான காமெடி, சென்டிமென்ட்டுடன் சொல்லியிருக்கிறார்கள்..


கார்த்திக்கு இந்த வேடம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஏற்கெனவே பையா, நான் மகான் அல்ல போன்ற படங்களில் வரும் இளமை துள்ளல் கேரக்டர். மனுஷன் பின்னி எடுத்துள்ளார். காமெடி மட்டுமின்றி செண்டிமெண்ட் சீனிலும் ஸ்கோர் செய்துள்ளார். மாற்றுதிறனாளியாக வரும் நாகர்ஜூனா  முகபாவனைகளிலேயே பல இடங்களில் பேசியுள்ளார். இப்படி ஒரு நட்பு கிடைக்காதா என ஏங்க வைத்துள்ளார்.

தமன்னா கார்த்தியுடன் ஜோடி போடும் மூன்றாவது படம். படத்தில் பெரிதாக அவருக்கு வாய்ப்பில்லை. கவர்ச்சி உடையுடன் வரும் தமன்னா இளசுகளின் மனதை கவர்வது உண்மை. பிரகாஷ்ராஜ், விவேக் தங்கள் வேடங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

இசை கோபி சந்தர். பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். வினோத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இயக்கம் வம்சி பெய்டிபல்லி. தெலுங்கு இயக்குனர் என்றாலும் தமிழ் நாட்டு ரசிகர்களின் ரசனையை புரிந்து கொடுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட் என திரைக்கதையில் கலக்கியுள்ளார்.

மொத்தத்தில் தோழா வரவேற்கத்தக்கவன்!!!
 

வெப்துனியாவைப் படிக்கவும்