பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

வியாழன், 4 செப்டம்பர் 2014 (22:27 IST)
பாண்டி என்ற மினி பஸ் ஓட்டுநர், கண்மணி என்ற நர்ஸைக் கெளப்பிய கதை தான் பட்டையக் கிளப்பணும் பாண்டியா. இதில் நகைச்சுவை மசாலா கலந்திருப்பதால், பயணம் ஓரளவு தாக்குப் பிடிக்கிறது.
 
வேல்பாண்டியாக விதார்த், முத்துப்பாண்டியாகச் சூரி. இருவரும் சகோதர்கள். பழனியில் ஓடும் சிற்றுந்தில் (மினி பஸ்) விதார்த் ஓட்டுநர், சூரி நடத்துநர். அந்தச் சிற்றுந்தில் தினமும் பயணிக்கும் செவிலிப் பெண் கண்மணியாக மனிஷா யாதவ். மனிஷா வரும் வரைக்கும் வண்டி பழுது என்று சொல்லி, சிற்றுந்தை நிறுத்தி வைப்பதும் அவரது பிறந்த நாளுக்காக மின்னல் என்ற சிற்றுந்தின் பெயரையே கண்மணி என்று மாற்றுவதும் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் எனப் பாடல்களை ஒலிபரப்புவதுமாக விதார்த்தின் காதல் அத்தியாயம் வளர்கிறது. 
 
மனிஷாவுக்காக நகைச் சீட்டு எடுத்து, இரண்டு பேரும் இணைந்து பராமரிக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கி, மனிஷா பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு எடுத்து, தன் பெயரில் ஆயுள் காப்பீடு செய்து, அந்தப் பாலிசிக்கான நாமினியாக மனிஷா பெயரைச் சேர்த்து எனப் புதுமையாக விதார்த் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

 
விதார்த்தின் காதலை மனிஷா மறுப்பதுடன் தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். அது பொய் என்று தெரிய வருகிறது. அப்போதுதான் அவர் காதலை ஏற்க மறுப்பதன் காரணமும் தெரிய வருகிறது. விதவை அம்மா, கண் தெரியாத அக்கா, வீடே தன் சம்பாத்தியத்தைத் தான் நம்பியிருக்கிறது எனப் பழைய வசனத்தைப் பேசுகிறார் மனிஷா. 
 
ஆனால், இந்தப் பின்னணியைக் கேட்டதும் விதார்த் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, நான் உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன் என்றுதானே. ஆனால், அவரோ, இனிமேல் நீ இருக்கும் திசையையே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார். மினி பஸ் வேலையையும் விட்டு விடுகிறார். இரண்டு நாள் அவரைச் சிற்றுந்தில் காணாத மனிஷா, தானே போய் எனக்கும் உங்க மேலே ஒரு இது என்கிறார். அப்புறம் என்ன, பாட்டு தான். 
 
மனிஷாவின் பார்வையில்லாத அக்காவுக்குத் திருமணம் செய்ய விதார்த் முயல்வதும் அவர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஏற்படும் சிக்கல்களும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டார்கள் என்பதும் தான் பின்பாதி கதை.
 
இந்தப் படத்தில் சூரியின் நகைச்சுவைக் காட்சிகள், நன்கு எடுபடுகின்றன. வழக்கம் போல ஏசுவதும் பேசுவதுமாக இருந்தாலும் அங்கங்கே முத்திரை வசனங்கள் (பஞ்ச் டயலாக்) பளிச்சிடுகின்றன. சீறும் பாம்பை நம்புடா, சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற பாட்டுக்கு ஒல்லி உடம்புடன் துள்ளி ஆடுகிறார். சந்தையில சவ்வு மிட்டாய் விக்கிறவன் மாதிரி, ஓணானுக்கு ஓவரா மேக்கப் போட்ட மாதிரி என வசனங்களில் மோனை அழகு மேலோங்கி இருக்கிறது.
 

பாண்டியா பைசா வசூல் மூவி - மனிஷா யாதவ்

மேலும்

சூரி மட்டுமின்றி, இமான் அண்ணாச்சி, கோவை சரளா, இளவரசு, டிபி கஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் எனப் பலரும் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் டிபி கஜேந்திரன் மருத்துவராக இருந்து நடத்தும் மருத்துவமனையில் நடக்கும் கூத்துகளும் கொள்ளைகளும் செம ரகளை. இந்த மருத்துவமனைக்காக, உள்ளுர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய, ஒரு வசனம் சொல்லு என்கிறார் கஜேந்திரன்.  அதற்கு, கூட்டிட்டு வாங்க, எடுத்துட்டுப் போங்க என்றும் பணம் எங்களுக்கு, பொணம் உங்களுக்கு என்றும் லொள்ளு சபா மனோகர் சொல்லும் முத்திரை வாசகம் அருமை.
 
சிற்றுந்தின் உரிமையாளராக இமான் அண்ணாச்சி, சிறப்பாக நடித்திருக்கிறார். எதையும் நம்பிவிடும் அவரைச் சூரி ஏமாற்றுவது மட்டுமின்றி, அவரைக் கூமுட்டை, அது இது என்று பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. பழைய படங்களில் இப்படி ஒருவரை ஏமாற்றினால், கடைசிக் காட்சிக்குள்ளாக அவரிடம் மன்னிப்பு கேட்பதாக ஒரு காட்சியாவது வரும். இப்போது அது இல்லை.
 
செல்பேசியில் பேசும்போது மீண்டும் மீண்டும் ரசத்தை ஊத்தட்டுமா? எனக் கேட்கும் மனைவியிடம் என் தலையில ஊத்து என இமான் அண்ணாச்சி சொல்லும்போதே ரசத்தை ஊற்றிவிடுகிறார் மனைவி. அங்கே டைமிங் கொஞ்சம் தவறுகிறது.


 
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், மெல்லிய உடல்வாகுடன் அளவாக நடித்துள்ளார். அண்மைக் காட்சிகளில், அவர் இன்னும் அழகாய் இருக்கிறார். செவிலியர் பாத்திரத்தில் நடித்துள்ளதால், எப்போதும் அவரை வெள்ளைச் சேலையிலேயே காட்டுகிறார்கள். பாடல் காட்சிகள் மட்டும்தான் விதிவிலக்கு. அவர் அறிமுகமாகும் காட்சி, இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அதுபோல், மனிஷா, விதார்த்தைக் காதலிப்பதற்கு அழுத்தமான காரணத்தை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் உருவாக்கியிருக்க வேண்டும். 
 
பார்வையற்ற பெண்ணை மணக்க விரும்பிய மாப்பிள்ளையாக விஜயானந்த் நடித்துள்ளார். பேருந்து நடத்துநரான இவர், தன் பணி நிரந்தம் ஆக வேண்டும் என்பதற்காக, தன் வீட்டை விற்று, லஞ்சம் கொடுத்துள்ளதாகக் காட்சி வருகிறது. அவர் எதிர்பார்த்தபடி பணி நிரந்தரம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பைப் படத்தின் கடைசி வரை இழுத்துக்கொண்டு செல்கிறார் இயக்குநர். கடைசியில் அவருக்குப் பணி நிரந்தரம் ஆகிவிடுகிறது. ஆனால், இப்படிக் குறுக்கு வழியில் முயல்வது தவறு என்றோ, அப்படிப் பெறும் வாய்ப்பு நிலைக்காது என்றோ காட்ட, இயக்குநர் தவறிவிட்டார்.
 
அருள்தேவ் இசையில் குத்துப் பாடல்கள் கிடுகிடுக்கின்றன. உருளை உருளைக் கிழங்கு, உரிச்ச உருளைக் கிழங்கு பாடல், ஓர் உதாரணம். பின்னணி இசையும் துள்ளாட்டம் போடுகிறது. அந்த நேரம் அந்தி நேரம் பாடல், மென்மையாக வருடுகிறது. மூவேந்தரின் ஒளிப்பதிவு, பழனியின் அழகைச் சிறப்பாகக் காட்டுகிறது.
 
சிற்றுந்தில் பெண்களை ஆபாசமாகச் செல்பேசியில் படம் எடுப்பவனை வில்லனாகக் காட்டியது நன்று. பழனியையும் ஒரு பழைய சிற்றுந்தையும் பத்து காமெடியன்களையும் வைத்துப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். தலைப்புக்கு ஏற்றபடி, பெரிதாகப் பட்டையைக் கெளப்பவில்லை. ஆனால், இந்தப் பழனிக் கதை, பஞ்சாமிர்தமாக இல்லாவிட்டாலும் பஞ்சு மிட்டாய் அளவுக்காவது ரசிக்க வைக்கிறது.

பாண்டியா பைசா வசூல் மூவி - மனிஷா யாதவ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்