கத்தி - திரை விமர்சனம் 2

தமிழ்ப்பறவை

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (12:07 IST)
முதலில் இப்படத்திற்குள் நுழையும் முன் இயக்குநர் முருகதாஸ் மற்றும் விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட்டான ‘துப்பாக்கி’யை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும்.
 
விவசாயிகள் போராட்டம் போன்ற ஒரு சீரியசான கதைக் களத்தை எடுத்துக்கொண்டதற்கே இயக்குநருக்கு ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும். கொஞ்சம் விலகினாலும், ஆவணப் படமாகிவிடும் அபாய நிலையில், முருகதாஸின் சரிவிகிதக் கலவையான திரைக்கதை, மாயம் செய்துள்ளது.
 
விவசாய மக்கள், நிலம், நீர் ஆக்கிரமிப்பு, கார்ப்பரேட்டின் அசுரக் கரங்கள், ஒரு நாயகன், போராட்டம், மைக் முன் மக்கள் பேசுவது, சுபம் என வழக்கம் போல டெம்ப்ளேட்டில் வந்துள்ள படம்தான் இதுவும். ஆனாலும் ரசிக்க வைக்கிறது.
 
 
விஜய் ’கத்தி’ என்னும் கதிரேசன், ஜீவானந்தம் (பெயர்களுக்குள் இருக்கும் குறியீடுகளையெல்லாம் அறிவாளி விமர்சகர்கள் பார்த்துக்கொள்வார்கள்) - இரு வித்தியாசமான வேடங்களில் விஜய். முன்னவர் திருடன், பின்னவர் போராளி. சந்தர்ப்பவசத்தில் இருவரும் இடம் மாறிக்கொள்கின்றனர். திருடன், போராளியாகிவிடுகிறார். சட்டென மாறாமல், வலுவான காரணங்களையும் முன்வைக்கிறார்கள். இரு வேடங்கள் எனினும் கத்தி எனும் கதிரேசன் தான் நாயகன், வில்லனின் வார்த்தைகளில் ‘வில்லாதி வில்லன்’. தனக்கான கதாபாத்திரத்தின் இயல்புடன் ஒன்றிவிடுகிறார். இளைய தளபதி எனும் பந்தாவெல்லாம் இல்லாமல், நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
 
கொஞ்சம் வித்தியாசமான திரைக் கதை, பத்து சிறப்பான காட்சிகளே (காயின் ஃபைட், டன்னல் சீன் உட்பட) படத்தை வலுவாக்கிவிடுகிறது. டீசர், டிரெய்லர் வந்த போதெல்லாம், படத்துக்கு ஒரு எதிர் அலை தோன்றியது. தற்போது அது இல்லாமல் இருப்பதே படத்தின் சிறப்பைச் சொல்லிவிடுகிறது.
 
வசனங்கள் ஆங்காங்கே நச். ‘உனக்குத் தேவையானது போக ,அதிகம் சாப்பிடும் ஒரு இட்லி, அடுத்தவருடையது’ 
 
சண்டைக் காட்சிகள் என வலிந்து திணிக்காமல், கதைக்குத் தேவையான இடத்தில் பொருந்திப் போவதால் ரசிக்க முடிகிறது. அனிருத்தின் பின்னணி இசை, படத்துக்குப் பலம்.
 
எந்தக் கவலையும் இல்லாமல் ரிலையன்ஸ் ஃபிரெஷ்ஷில் மட்டுமே காய்கறிகள் விளைகின்றன எனும் மனப்போக்கில் இருக்கும் நகரத்து மக்களுக்கு, சின்னதொரு சலனத்தையாவது ஏற்படுத்தும் படம். படத்தில் கதை-திரைக்கதை மட்டுமே பிரம்மாண்டம்.
 
கோலா, விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங், 2ஜி ஊழல் எனப் பல சென்சிடிவ் விசயங்களைத் தைரியமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர்.
 
கிராமத்து விவசாய மக்கள் போராட்டக் காட்சிகள் படத்துக்கு எமோசனல் மதிப்பைக் கூட்டுகின்றன. நண்பராக வரும் சதீஷ் அடக்கி வாசித்திருக்கிறார்.
 
சமந்தா வரும் காட்சிகளும், காதல், பாடல் காட்சிகளும் படத்துக்குத் தேவையே இல்லை. தாராளமாகக் கத்திரி போட்டிருந்தால் ‘கத்தி’ இன்னும் படு ஷார்ப்பாக வந்திருக்கும்.

கத்தி திரைப்படம் - சில காட்சிகள்

முருகதாஸ்+விஜய்+அனிருத் கூட்டணி கலக்கியிருக்கிறது.
 
மொத்தத்தில் ’இரட்டை வேட விஜய் படம் ஓடாது, ஒரே இயக்குநரிடம் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ஓடாது’ போன்ற மூட நம்பிக்கைகளைக் கிழித்தெறிகிறது இந்தக் ‘கத்தி’.
  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்