போகன் - திரைவிமர்சனம்

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (14:41 IST)
நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நடிகை ஹன்சிகா, மற்றும் பொன்வண்ணன், "ஆடுகளம்" நரேன், நாசர் போன்ற நட்சத்திர பட்டாளத்துடன், டி.இமான் இசையில், சௌந்தர்ராஜன் ஓளிப்பதிவில், லக்ஷ்மண் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் போகன்.


 
 
விக்ரமாக, ஜெயம் ரவி நேர்மையான அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா ஆடுகளம் நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 
 
பழனி சித்தர் போகர் பற்றி அறிந்து, மன்னர் பரம்பரையின் கடைசி வாரிசு ஆதித்யாவாக வரும் அர்விந்தசாமி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்கிறார்.
 
போக சித்தரை பற்றி அறிந்து வைத்துள்ள அர்விந்தசாமி, அவரின் ஓலைச்சுவடி மூலம் வசிய சக்தியை கற்றுக்கொண்டு, சென்னையில் உள்ள நகைக்கடையிலும், வங்கி கிளையிலும் பல கோடிகள் பணம் கொள்ளையடிக்கிறார். 
 
இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி பணம் கொள்ளை அடிக்க வங்கியின் முன் செல்கிறார்.
 

 
அப்போது, ஜெயம் ரவியின் அப்பாவான ஆடுகளம் நரேனை வசியம் செய்து வங்கி பணத்தை கொள்ளை அடிக்கிறார் அரவிந்த் சாமி. பின்னர், வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதை காரணமாக காட்டி, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

 
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களம் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து கொண்டிருக்கும் போது, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.
 
அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த்சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி என்ன செய்கிறார்? அரவிந்த்சாமி உருவத்தில் இருக்கும் ஜெயம் ரவி ஜெயிலில் என்னவானார்? ஹன்சிகாவுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணம் நடந்ததா? என்பது போகனின் மீதி கதை.
 
ஜெயம் ரவி இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்திருக்கிறார். 
 
படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரமும் வலுவானது. அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
ஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மேலும், நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். 
 
இயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்து, இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டு வெற்றிகண்டிருக்கிறார்.
 
இமான் இசையில் இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 
 
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடித்தாலும் இறுதியில்  திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. 
 
மொத்தத்தில் ‘போகன்’ வசியக்காரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்