கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் கடவுளை வைத்து ஏமாற்றுகிறான்! - "வடக்குபட்டி ராமசாமி" திரை விமர்சனம்!

J.Durai

திங்கள், 5 பிப்ரவரி 2024 (09:28 IST)
டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்"வடக்கு பட்டி ராமசாமி"


 
இத் திரைப்படத்தில்  மேகா ஆகாஷ், லொள்ளு சாபா சோசு, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், நிலழ்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி(சந்தானம்) தனது சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றார்.

இதைக் தெரிந்து கொண்ட அந்த  கிராமத்தின் தாசில்தார்(தமிழ்) நீங்கள் அடிக்கும் கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்கிறார். இதனால் சந்தானத்திற்கும் தமிழுக்கும் மோதல் ஏற்படுகிறது.

இதனால் ஒரு சதித் திட்டம் தீட்டி அந்த ஊர் மக்களுக்கு இடையே பிரிவினையை உண்டு பண்ணுகிறார் தாசில்தார் (தமிழ்). இந்த மோதலால் அந்த கோயில் அரசாங்கத்தால் மூடி சீல் வைக்கப்படுகிறது.

சந்தானத்துடன் இணைந்து அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் கோயிலை திறந்து விடுவோம் என அரசாங்கம் அறிவித்தது.

மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம்  என்னவெல்லாம் செய்கிறார்? அதை தடுக்க முயற்சிக்கும் தாசில்தார்(தமிழ்)  நிலை என்ன? என்பது தான்  இப்படத்தின் மீதி கதை.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் அந்த கடவுளை வைத்து  மக்களை எப்படியெல்லாம் முட்டாளக்கி பணம் சம்பாதிக்கிறான் என்று மிகச் சிறப்பான நகைச்சுவையுடன் கூடிய  திரைக்கதையை கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி.

சந்தானம் படத்தில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதை எல்லாம் இந்த படம்  நிறைவாக கொடுத்து ரசிக்க வைத்துள்ளது. நாயகன் சந்தானம்  வசனங்களால் ரசிகர்களுக்கு காமெடி விருந்து கொடுத்துள்ளார்.

இவரது டைமிங் காமெடி  படம் முழுவதும் நம்ம வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் சந்தானம். படத்தின் நாயகி மேகா ஆகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர்

லொள்ளு சபா, ரவி மரியா, ஜான்விஜய், சேசு, மாறன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், இட் இஸ் பிரசாந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் உட்பட வரும் காட்சிகள் அனைத்திலும் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளனர் குறிப்பாக கூல் சுரேஷின் அசிஸ்டன்ட்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கின்றனர்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நடிகர் நிழல்கள் ரவி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றார் போல சிறப்பாக காமெடியில்  அசத்தியுள்ளார்

வடக்குப்பட்டி என்று ஒரு  கிராமம் மற்றும்  அதை சுற்றி உள்ள பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தீபக். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை மிக நேர்த்தியாக செய்துள்ளார் இசையமைப்பாளர் சான் ரோல்டன்

 மொத்தத்தில் "வடக்குப்பட்டி ராமசாமி"சிரிப்புக்கு பஞ்சமில்லை

Updated by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்