காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.
வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.
உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.