தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு தேர்தலில் போட்டியிட வடக்கு மும்பை தொகுதி அளிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
அதையடுத்து வடக்கு மும்பை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊர்மிளா தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஊர்மிளா காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்துள்ளார்.
புகாரில் தான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். பிரச்சாரத்திற்கு வரும் பெண்களை பயமுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு உரிய போலிஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.