பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர் பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ வான ஜெயராமனின் மகனான பிரவீன் ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
தமிழகத்தையே நடுநடுங்க வைத்த நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி விவகாரம் தேர்தல் செய்திகள் காரணமாக திடீரென பின்வாங்கிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக வின் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடம் ’ பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?’ என்றார். அதற்கு மக்கள் ‘இல்லை’ என்றனர்.
அதையடுத்து ’ பொள்ளாச்சி சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள நபர்களுடன் சம்மந்தப்பட்டவர் ஜெயராமனின் மகன் பிரவீன். ஜெயராமன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதைச் சந்திக்கத் நான் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்’ எனக் கூறியுள்ளார்.